No results found

    மண்ணிற்கு நலம் தரும் மண்புழு உரம்


    விவசாயத்தில் இரசாயன உரங்கள் மற்றும் நச்சு விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்துதலே மனிதனின் பல்வேறு நோய்களுக்கு காரணம். இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மைக்கு தேவையான முக்கிய இடுபொருளாக மண்புழு உரம் பயன்படுகிறது. மண்ணிற்கு வளம் மண்புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.

    வீட்டுத்தோட்டங்களில் மண்புழுக்கள் இருந்தால் நம் வீட்டில் கிடைக்கும் சமையலறை கழிவுகளை மட்கச் செய்து அதன் மூலம் இயற்கை உரம் தயாரிக்கலாம். இதனால் நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது. மேலும் தொழுஉரமானது மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.

    மண்புழு கண்டறிதல்

    மண்புழு வளர்க்க மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.

    500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும். வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும். 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மண்புழு பண்ணை

    மண்புழுக்களை பண்ணை அமைத்து நாமே தயாரிக்கலாம். இதனால் நம் வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான சத்தான இயற்கை உரம் கிடைக்கும். மண்புழு பண்ணையை அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் கூட வைத்திருக்கலாம். இதற்கு மூடிகளோடு கூடிய ஒரேயளவான இரண்டு தொட்டிகள் / வாளிகள் இருந்தால் போதும்.

    இரண்டும் ஒளி ஊடுவ முடியாதனவாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு தொட்டியின் அடிப்பாகத்தையும் மூடியையும் ஒன்றாக வைத்து துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த துளைகள் ஒரு சென்டி மீட்டர் விட்டம் இருக்க வேண்டும். இவை அடைபடாமல் இருக்க இரண்டிலும் துளைகளைச் சேர்ந்தாற் போல் வைத்து வெளிப்பக்கம் தெரிகிற மாதிரி ஏதாவது அடையாளம் செய்து வைக்கவும்.

    அடுத்த மூடியில் சிறிய துளைகள் செய்து கொள்ளவும். இவை காற்றோட்டத்துக்காக மட்டும். அடியில் துளைகளில்லாத தொட்டி, அதன் மேல் பெரிய துளைகள் கொண்ட மூடி, அதன் மேல் துளைகள் பொருந்தி வருமாறு அடுத்த தொட்டி, அனைத்தின் மேலும் சிறிய துளைகள் கொண்ட மூடி என்கிற ஒழுங்கில் அடுக்கிக் கொள்ள வேண்டும்.

    மேல் தொட்டியின் உள்ளே 1 செ.மீ அளவுக்கு சிறிது சிறிதாகக் கிழித்த நியூஸ் பேப்பர் நனைத்துப் போட வேண்டும். அல்லது பழைய சாக்கு நனைத்து போடலாம். அதன் மேல் மண் - 1 அங்குலம் வந்தால் கூடப் போதும். தோட்டத்தில் உள்ள மண்புழுக்களை கொஞ்சம் தேடிப் பிடித்துப் போடுங்கள். பெரிய வகைப் புழுக்களானால் நல்லது. 10லிட்டர் அளவுள்ள தொட்டிக்கு ஒரு சிறிய கைப்பிடி அளவு புழுக்கள் போதும். புழுக்கள் வெளிச்சத்தைத் தவிர்க்க முதலில் மண்ணுள் ஒழிந்து கொள்ளும்.

    சமையலறை கழிவுகள்

    சமையலறைக் கழிவுகளைத் தினமும் உள்ளே போட்டு மண்ணால் மூடிவிடவும். புதிதாக மண் போட வேண்டியது இல்லை. இருக்கும் மண்ணை விலக்கி, கழிவுகளைப் போட்டு திரும்ப மூடி விடவும். புழுக்கள் உண்ண ஆரம்பிக்க எச்சம் கீழே உள்ள தொட்டியில் நிரம்பி வரும். இதனை 'வர்ம் டீ' என்பார்கள்.

    9:1 என்கிற விகிதத்தில் நீரும் வர்ம் டீயும் கலந்து செடிகளுக்குப் உரமாக ஊற்றலாம். இப்படித் தொடர்ந்து உரத்தை எடுத்துவிட்டு கீழே உள்ள தொட்டியைச் சுத்தமாகவும் வைத்து இருந்தால் துர்நாற்றம் வீசாது.

    கீழ்த் தட்டு முற்றாக நிரம்பிய பின்பே மேற் தொட்டியில் போட ஆரம்பிக்க வேண்டும். புழுக்கள் கீழே உள்ள உணவு முடிந்ததும் மேலே போய்விடும். சில நாட்கள் கழித்து நடுத் தொட்டியை எடுத்து அதில் உள்ள பசளையை மண்ணோடு கலந்து செடிகளுக்குப் போடலாம். மேற்பரப்பில் புழு முட்டைகள் பொரிக்காமல் மீதம் இருந்தால் அவற்றைப் புழுக்கள் உள்ள தொட்டியில் சேர்த்து விடுங்கள். முட்டைகளை தொட்டிச் செடிகளுக்குப் போட்டால் அங்கு அவை புழுக்களாகி விடும். இது செடிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

    Previous Next

    نموذج الاتصال