No results found

    மழையால் பசுமைக்கு திரும்பிய மல்பெரி செடிகள்-வெண்பட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு


    உடுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் 3 ஆயிரம் ஏக்கர் வரை மல்பெரி சாகுபடி செய்து புழு வளர்ப்பு மனைகளில் வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்கின்றனர். புழு வளர்ப்பில்  தரமான மல்பெரி இலைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மல்பெரி செடிகள் பராமரிப்புக்கு பட்டு வளர்ச்சித்துறை மற்றும் மத்திய பட்டு வாரியத்தின் வாயிலாக பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சீதோஷ்ண நிலை மாறும் போது  மல்பெரி செடிகளில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு இலைகளின் தரம் குறைகிறது. செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் பாய்ச்சினாலும் அதிக பனிப்பொழிவு மற்றும் வெப்ப காலங்களில் நோய்த்தாக்குதல் ஏற்படுவது வழக்கம். நோய்தாக்கிய இலைகளை அறுவடை செய்து உணவாக வழங்கும் போது புழுக்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

    இதேபோல் நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது செடிகள் பராமரிப்பு மற்றும் புழு வளர்ப்பை விவசாயிகள் கைவிடும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் உடுமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக  பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழை பெய்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் மல்பெரி செடிகள் பசுமைக்கு திரும்பியுள்ளன. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தோட்ட பராமரிப்புக்கும் உதவியாக இருக்கும். எனவே வரும் சீசனில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال